கொரனாவே!. நில்!.. கேள்.

<<<<>>>>>>-

கொல்லும் பெருநோய் கொரனாவே பாரினை
வெல்லும்  திறமாய் விரைந்தழித்தால் - வல்லவர்கள்
வாடிக் கிடப்பாரோ  வாய்க்குமோர் நல்மருந்து
தேடித் தருவர் தெரி!                                 1.

தெரிந்திடுவாய்! மக்கள் திணறிடும் வாழ்வைப்
புரிந்திங்கு போய்த்தொலை வாயே! - மரிப்பவர்
பல்குதல் கண்டாம் பதைக்கமனம் நிற்கிறோம்
புல்லனே விட்டோடிப் போ!                   2.
 
போய்த்தொலை நீயிங்கு போடுகின்ற ஆட்டத்தைச்
சாய்த்துனைப் பாடையிற் தானேற்றி - மாய்த்திடுவோம்
தள்ளித் துயரினைத் தாரணி காத்திடுவோம்
துள்ளிக் குதிப்போம் துணிந்து!          3.
 
துணிந்தே யெழுந்தோம் தொடரா யெதிர்ப்போம்
தணிந்தால் மகிழ்ந்தே சகிப்போம் - பணிந்து
விலகி நலத்தை விளைவிப்பாய்  நன்றே
உலகம் மதிக்கும் உனை!                        4.
 
உனையார் உருவாக்கி ஊருக்குள் விட்டார்
நனையத் துயரினில் நாடு - நினையாய்!
மனத்தாற் பலரிங்கு வாடியே மாய்ந்தாற்
தினமும் முறையோ சினந்து!             5.
 
விரைவாய்ப் பரவி மிகவலி தந்தோய்!
இரையெனக் கொண்டாய் எமையேன்! - வரையறை
இன்றி மரணத்தின் ஈட்டியெனப் பாய்கின்றாய்
சென்றுவிடு இன்றே சிறப்பு!               6.
 
கொன்று குவிக்கும் கொரொனாவே நீயிங்கு
வென்று களிக்க விடுவோமா? - இன்றென்ன
என்றுமுன் கோரமுகம் இவ்வுலகார் நெஞ்சினுள்
நின்று வருத்தும் நிலைத்து!                7.
 
ஆற்றுப் படுத்தவென ஆள்வோர் துடிக்கின்றார்
நேற்றுப் படுத்தோரும் நீங்கினார் - கூற்றனே
தூக்கிக் கொடுவாள் துரத்தினும் நாமுன்னைத்
தாக்கி எழுவோம் தகர்த்து!                  8.
 
காலனவன் எய்தவொரு அம்பாய் நீ
ஞாலமிதைக் கவ்விடும் நஞ்சாகி - வாலசைத்து
வட்டமிடல் ஏனோ மறைந்தே யழித்தாலும்
காட்டுவோம் எம்திறன் காண்!           9.
 
பாடையில் உன்னைப் படுக்க வைத்திங்கு
பீடையைப் போக்கிப் பிறப்பெடுப்போம் - கூடையில்
கொத்துமலர் கொண்டாற்போல் கூத்தாடிப் பூமியில்
மெத்தச் சுகிப்போம் மிளிர்ந்து
!         10.