என்னூர் 

 செம்மண்  செழுமையில் சேர்புகழ் சூழெழும்
 எம்மண் இணுவையா மென்றிடுவாய் - இம்மண்ணை
 எம்முயி ராமென வேற்றிப் பரவுவாய்
 நம்முன்னோர் காத்தமண்
நம்பு!    1.

நம்பினார்  மண்தனை நாட்டப் பயிரனைத்தும்
கும்மிருள் சூழ்வரை கொத்தினார் - தம்வியர்வை
தான்வார்த்தே நாளும் சலிப்பிலா தாங்குழைத்தார்
ஆண்டு பலவென் றறி                  2.
 
அறிவிலா ரென்றெண்ணி ஆங்கில நாட்டார்
பொறிவைத்த அக்காலப் போதில் - அறிவொடு
நன்றெனச் சைவராய் நானிலத்தில் வாழ்ந்தாங்கு
நின்றார் நெறியொடு நிமிர்ந்து.           3.
 
நிமிர்பனைகள் ஊரை நிறைத்திருக்கும்  எங்கும்
தமிழ்ப்பண் ஒலியே தவழும் -  ஞிமிறெனத்
தோட்டத்தில் நாளும் துயரற்  றுழைத்தேதம்
வாட்டம் தவிர்த்தார் மகிழ்ந்து!           4.
 
மகிழ்ந்தார் புகழ்ந்தார்  மனத்தி லுளதைப்
பகிர்ந்தார் வளர்ந்தார் பாரில் - மிகுமோ
ஒருவூர் இதுபோல் உலகிதி லென்றார்
திருவூரைப் போற்றினார் திளைத்து!      5.                 
 
போற்றினார் முத்தமிழ்ப் பொங்கலிட் டாடினார்
வேற்றுமை  யின்றி விருந்திட்டார் -  ஏற்ற
வழிநின் றுறவாடும் மாண்பினி லின்பம்
வழிந்தோட வைத்தாரை வாழ்த்து!.       6.
 
வாழ்த்துரைக் கேங்கி மயங்கிக் கிடந்திடார்
வாழ்வின் நெறிக்கே மயங்குவார் - ஏழ்மை
தலைவிரித் தாடினும்         தாங்கியே நின்று
தலைநிமிர்ந்தார் என்றிங்கு சாற்று
!                 7.